Saturday, 10 September 2016

விருட்ச விதைகள்



                    விருட்ச விதைகள்

முதுமை என்பது வரம் வாழத் தெரிந்தவர்களுக்கு. இளமையில் விதை என்பார்களே. அது முதுமைக்கான விதை தான்.

 அத்தகைய வரம் வாங்கி கொண்டு வந்தவர்கள் தான் காமுவும் வேம்புவும்.

கண்ணுக்கு கண்ணாக இரண்டு குழந்தைகள். பொண் ஒண்ணு பிள்ளை ஒண்ணு. இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி பேரக் குழந்தைகளும் பார்த்தாச்சு.

விஸ்தாரமா வீடு. ஆள் படைக்கு குறைவில்லை. ராணி மாதிரி காமுவை வாழ வைச்சார் வேம்பு. என்ன இன்னிக்கு பார்த்தா அவருக்கு வயசு எண்பதுன்னு சொல்ல முடியுமா என்ன. அப்படி ஒரு மெலிதான தேகம். தேஜஸ்ல அவரது அம்மாவை கொண்டு இருந்தார்.

காமு மட்டும் என்ன குறைந்தவளா என்ன? ஆயிரம் பேருக்கு அன்னபூரணியாய் சமைத்த கை. அந்த காலத்தில் காஸ் அடுப்பா , மின் அடுப்பா .. ஒன்றும் இல்லை.  விறகடுப்பின் புகையை ஊதி ஊதி இவள் கண் இரண்டும் மங்க தொடங்கி இப்போ சுத்தமா பார்வையே இல்லை.

ஆனாலும் லஷ்மீகரம் முகத்தில் தாண்டவமாடும். ஒன்பது கஜம் சின்னாளம்பட்டும் தேவேந்திராவும் மாற்றி மாற்றி அமர்க்களப்படும். பெரிய மூக்குத்தியும், டாலடிக்கும் வைரத் தோடும், கைக்கு இரண்டாக நெளி வளையல்களும், சற்று பெரிதான வாடாமல்லி கலரில் குங்குமமும் காமுவை மிக அழகியாக காட்டும்.

அந்த அறையே சாம்பிராணி புகையின் நறுமணத்தால் சூழப் பட்டு இருந்தது. ஒரு பக்கம் கட்டில் போடப் பட்டு கட்டிலோடு கட்டிலாய் படுத்து இருந்தார் வேம்பு.  சுற்றிலும் எத்தனை பேர் இருந்தாலும் பார்வை என்னவோ காமு மேல் தான் இருந்தது. என் மனைவி எவ்வளவு லஷ்மீகரமா இருக்கான்னு நினைத்தார் வேம்பு.

ஆச்சு இன்னியோட  ஆறு மாசமாச்சு. ஒரு பக்கம் கையும் காலும் விழுந்து. வாயும் கோணிண்டு பேச்சும் குழறலா தான் இருக்கு. இவர் என்னவோ பேசறார் தான். மத்தவாளால தான் புரிஞ்சுக்க முடியலை.

“காமு, இன்னிக்கு அமாவாசைடி. கனத்த நாள் . பத்திரமா பார்த்துக்கோடி உன் ஆம்படையானை!”
               வந்திருந்த அத்தை அவளிடம் சொன்னாள். அத்தை படு கிழம். அத்தனை உறவுகளை பார்த்தவள்.

காமுவின் நடுங்கும் கைகளை அந்த முதிய கரம் பற்றிக் கொண்டது.

'ம்' என்றாள் காமு. எல்லா வைத்தியமும் பார்த்தாச்சு. ஆத்துக்கு கூட்டிண்டு போங்கோன்னுட்டாரே அத்தை. இனி தெய்வம் தான் என்றபடி வேம்புவை நோக்கிச் சென்றாள்.

பொண்ணும் பிள்ளையும் கலங்கி நின்றார்கள். பேரன் பேத்திகளும் அப்படியே. வேம்பு அத்தனை பேருக்கும் உசிராச்சே. காமு எதற்கும் கலங்க வில்லை. பிள்ளையின் கை பிடித்து கட்டில் அருகே அமர்ந்து கொண்டாள்.வேம்புவின் கை அவள் கைக்குள் இருந்தது. புறங்களை தள்ளி விட்டு அகமோடு பேசினர் மனதால்.

"பதினாறாம் வாய்ப்பாடு சொல்லுடா வேம்பு.!"

ஆசிரியர் குச்சியை எடுத்துக் கொண்டு மிரட்டினார். அன்றைய பாடத்தை படிக்காத வேம்பு தலையை குனிந்து நிற்க ..

"இந்தாடி காமு, நீ அவனது அத்தை பெண் தானே. உன் கையால் அவனை ரெண்டு கொட்டு கொட்டு. அதான் தண்டனை "
என்று சொல்ல அவளும் கொட்டவும் வகுப்பே கொல்லெனச் சிரித்தது.

"நீ வாடி ஆத்துக்கு. ஆத்திரம் தீர கொட்டுவேன் "
என சூளுரைத்த அவன் இன்று வரை கோபமாக கூட பேசியதில்லை.

இரவும் வந்தது. அனைவரும் வேம்புவை சுற்றியே படுத்து கொண்டிருந்தனர். அமாவாசை வேறா எங்கும் இருட்டு. ஒரு வெளிச்சம் இருட்டில் அஸ்தமிக்கப் போகும் நேரத்தை நினைத்து மனம் நொந்தனர்.

வேம்பும் சாதாரண பட்டவரில்லை. கை தேர்ந்த ஜோஸ்யர். கணக்கிலேயே தன் காலத்தை கணித்து நாள், நேரம் , நிமிடம் முதற்கொண்டு எழுதி வைத்து இருந்தார். அதை தெரிந்து கொண்ட காமுவுக்கு மனம் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை.

பார்வை அப்படியே அந்த வெள்ளி கூஜா பக்கம் சென்றது. ஒருமுறை சிவகங்கை அரண்மணை சென்ற போது அந்த வேலைப்பாடுள்ள பன்னீர் சொம்பு மாடலில் அமைந்த கூஜாவை பார்த்து பெண் ஆசைப்பட்டாள் என்பதற்காக வெள்ளிக்கடை வாலா செட்டியை ஆத்திற்கே கூப்பிட்டு அதே மாடலில் பண்ணச் சொன்னார். அது இன்னும் அவளின் பெண் வரை வேம்பின் பேர் சொல்லி நிற்கிறது. அதில் பால் நிரப்பி தலைமாட்டில் வைத்திருந்தார்கள்.

 சொந்தங்களும் பந்தங்களும் சிறிது பாலை வேம்புக்கு கொடுத்த வண்ணம் இருந்தார்கள்.

போகும் தசையில் ராம நாமம் சொல்வது பயணிக்கும் ஜீவனுக்கு நல்லதென காமுவின் சின்னம்மா சொல்ல பேரனும் பேத்திகளும் ராமா ராமா என்று சொல்லி கொண்டே இருந்தனர்.

சட்டென முழித்த வேம்பு “ நாமா வேணாம் முகா சொலு” என்றார்.

 ராமன் வேண்டாமாம் . முருகா என் சொல்லணுமாம். அந்தளவு முருகன் மேல் ஈடுபாடு. வைணவர் தான் ஆனாலும் முருகனுக்கென கோவில் கட்டி அதனை பரம்பரையாக பராமரித்து வரும் குடும்பம் அவர் குடும்பம்.

  ரேழியில் ஆளரவம் கேட்டது. இரவு மணி பதினொன்று. எப்பவுமே அந்த வீட்டில் கதவடைப்பதே இல்லை. வெறுமே சாத்தியிருப்பார்கள். யார் என பார்க்க பிள்ளை எழுந்து போனான். காமுவும் சிந்தை கலைந்து என்னவென்று விசாரித்தாள்.

"அம்மா! பெரியம்மா!  பெரிய சாமி எப்படிம்மா இருக்காரு? "
என்றபடி வந்த ஆண்கள் அனைவரும் மாலை போட்டிருந்தனர். அவர்கள் ஊரிலிருந்து திருச்செந்தூருக்கு ஒவ்வொரு ஷஷ்டிக்கும் பாத யாத்திரையாக செல்பவர்கள்.  அன்று அமாவாசை கிளம்பினால் ஷஷ்டி  அன்று முருக தரிசனம். முருகனுக்குகந்த நாள்.

"நம்ம சாமி கிட்ட துண்ணூறு வாங்காம நாங்க பயணிக்க மாட்டோமே பெரியம்மா. அதான் வந்தோம் " என்றனர்.

காமுவும் வந்த அழுகையை அழுந்த துடைத்துக் கொண்டு பிள்ளையிடம் கை காண்பித்தாள். அவன் உடனே எழுந்து வந்து தகப்பனாரிடம் காதில் சொல்ல வேம்பு முகத்தில் கோடி சூர்ய ப்ரகாசம். என் அப்பன் என் முருகன் எனை கூப்பிட ஓடோடி வந்து விட்டான் என்று மனதோடு ஆர்ப்பரித்தாரோ. அவ்வளவு தேஜஸ் முகத்திலே. பார்த்த அனைவருமே காமுவிடம் சொன்னனர் அவர் விடை பெறும் நேரம் வந்து விட்டதென.

எழும்பாத வலது கையை தூக்கி பிள்ளையே அனைவர் நெற்றியிலும் திரு நீறை இட்டு விட்டான். அனைவரும் வேம்பின் கால் தொட்டு வணங்கி சென்றனர்.

சூழ்ந்த மௌனத்தை உள்ளே வந்து கொண்டிருந்த அடுத்த ஆத்து அம்பி கலைத்தான்.
"யாத்திரை கோஷ்டிக் காரா  இவ்வளவு நேரம் பயணத்தை ஆரம்பிச்சிருப்பாளே. இன்னும் அரை மணி நேரத்தில் ஊர் எல்லையை தாண்டிடுவா. பத்திரமா எல்லோரும் போய்ட்டு வந்துடணும் முருகா " என்றபடி வந்து கொண்டிருந்தான்.

"ஆமாமா அம்பி . பயணம் ஆரம்பிச்சுடுத்து."
 வேம்புவை தொட்டு தடவிக் கொண்டிருந்த காமு சொன்னாள்.

"எல்லோரும் வாங்கோ குழந்தைகளா ! உங்க தாத்தா பயணப் படறார். கை கூப்புங்கோ.! "

 பிள்ளையை கூப்பிட்டு வேம்புவை அவன் மடி மேல் வைச்சிக்கச் சொன்னாள். பெண்ணை வேம்புக்கு வாயில் பால் வார்க்கச் சொன்னாள். தான் மட்டும் அவர் பார்வையில் இருந்து நகரவே இல்லை. வேம்புவும் அவளையே அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். கை அவளது கைக்குள் இருந்தது.

குழந்தைகள்  "முருகா ! முருகா !"என சொல்ல காமுவின் கை ஒவ்வொரு பகுதியாய் தடவியது. வயிறு சூடு இல்லடா . குளிர்ந்து போச்சு. இன்னும் மேலேறி விலா பக்கமும் அடங்கி போச்சு.

"ஏண்ணா! என்னை விட்டு போறேளா? "

காமுவின் மனம் அரற்றியது.

 "கொடுத்து வைத்தவர்னா நீங்கள். இத்தனை பேரும் அருகிலிருந்து உங்களை வழியனுப்பறா. "

விடாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது அவளுக்கு.

வேம்பின் பார்வை அவளை விட்டு அகல வில்லை. அகக் கண்ணால் அவரும் மனக் கண்ணால் அவளும் வாழ்க்கையை பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.

ஆச்சுடா உடல் சூடு போய்டுத்து. கண் வழியா தான் உயிர் போக போறது. தலையில் கை வைத்து தடவிய படியே காமு குழந்தைகளை நமஸ்காரம் பண்ணச் சொல்லி உத்தரவிட்டாள்.

வேம்பின் கை அவள் வளையலை பிடித்தபடி இருக்க கண் அவளை பார்த்த படி இருக்க உயிர் பயணம் ஆரம்பித்தது. திருசெந்தூருக்கென பயணப் பட்டவர்கள் ஊர் எல்லை தாண்டும்  வரை பொறுத்து இருந்து அவரின் பயணம் ஆரம்பித்தது.

காமுவுக்கு கண் இல்லாத குறையை போக்கி கண்ணாய் இருந்தவர் காலன் எடுத்துக் கொண்ட பத்தாம் நாள்.

அடுத்தாத்து செல்லம்மா மாதிரி என்னையும் முக்காடு போட்டு  உட்கார வைச்சுடுவாளோ என கலங்கிய காமுவின் கை பிடித்த பேத்தி அனைவரிடமும் உரக்கச் சொன்னாள்.

"எங்க பாட்டி எப்பவும் இப்படியே தான் இருப்பா. எங்க தாத்தாவோட மகாலஷ்மி அவோ. அவர் இப்படி நகைகளோடு பார்க்கத் தான் ஆசைப்படுவார்."

புரிந்து கொண்டாயே என்னை என கலங்கிய காமுவின் கை பேத்தியை தழுவிக் கொண்ட படி வேம்புவை நமஸ்கரித்தது.

வெகு நேரம் காலை நீட்டிக் கொண்டு பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்ததால் மரத்துப் போன காலை நீவி விட்ட படி எழுந்த காமுவின் காதில் கொள்ளுப் பேரனின் வீறீட்ட அழுகை புன்னகையை பூசியது. ஆசை தீர அவனை எடுத்து அணைத்துக் கொண்டு சொன்னாள்..

"எங்க போறாராம் அவர் என்னை விட்டுட்டு? இதோ வந்துட்டாரே எங்காத்து வேம்பண்ணா. "
பேத்தி வயத்துக் கொள்ளுப் பேரன் வேம்பு பிறந்த அதே அமாவாசை சுவாதியுடன் கூடிய தீபாவளி  பிறந்திருந்தான் . ஆம்.  இருட்டில் கிடந்த வெளிச்சம் பிரகாசித்தது.

                                                                   ..       முற்றும்.      ...


No comments:

Post a Comment