சிறுகதைகள்
Monday, 11 June 2018
Saturday, 10 September 2016
வேடிக்கை மனிதர்கள்
வேடிக்கை மனிதர்கள்
வாசு! வாசு! கூப்பிட்டுக் கொண்டே வந்தான் ஹேமந்த்.
விடாது ஜன்னலில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வாசுவை தோளைத் தட்டி,
என்னடா ! கூப்பிட்டு கூப்பிட்டு உன்னைத் தவிர எல்லோரும் திரும்பி பார்க்கறாங்க. உனக்கு எங்க யோசனை? வா! கேண்டீன் போய் சாப்பிட்டு விட்டு வரலாம் .
ஹேமந்த்! அங்க பார்த்தியா? இரண்டு பேர் சாமியார் மாதிரி..அவங்களைத் தான் பார்த்துக்கிட்டு இருந்தேன் என அவன் கை காட்டின திக்கைப் பார்த்தான் ஹேமந்த்.
அவனுக்கும் இது என்ன இங்கு என இருந்தது.
அவர்கள் வேலை பார்ப்பது கப்பல் கட்டுமான கம்பெனியில். கட்டுமானம் ஆதலால் கட்டுப்பாடுகளும் அதிகம். அனைவரும் ஆரஞ்சு வண்ண முழு சட்டையில் சீருடை அணிந்திருந்தனர். உள்ளே எந்த நபருக்கும் அனுமதி கிடையாது. அப்படி இருக்க கம்பெனி வாசலில் இது என்ன ? இவர்கள் சாமியார்களா? கேட்டான் ஹேமந்த்.
நானும் அதைத் தாண்டா யோசித்துக் கொண்டு இருக்கிறேன். ஏதாவது யோகப் பயிற்சியோ? - இது வாசு.
டேய்! அப்படின்னா அந்த ஆளைப் பிடிக்கணும்டா. நான் கூட யோகா கத்துக்கணும்
அடப் போடா! வந்துட்டான் யோகா கத்துக்க. யோகா கிளாஸ்க்கு போய் தூங்குனவன் தானே நீ.
வாசு ! இது டூ....மச்! நான் முதலிலெல்லாம் தூங்கல. கடைசியில் படுத்துண்டே பண்ணும் போது தான் தூங்கிட்டேன். அப்புறம் மாஸ்டர் வந்து தட்டி எழுப்பினதும் அந்த பக்கமே போகலை.
இவங்க யாருன்னு கேட்டு போயிடலாம்டா.
ஹேமந்த்! கீழே உள்ளவர் உட்கார்ந்திருக்கார். மேலே இருக்கறவர் மிதந்துண்டு இருக்கார்.. எப்படிடா? ஏதாவது மாயமா? மந்திரமா?
வாடா ! கிட்ட போய் பார்க்கலாம். அப்படியே கேண்டினில் காப்பி வாங்கிக் கொண்டே கிட்ட போனார்கள் இருவரும்.
எங்கடா மிதக்குறார். ? ஒரு கம்பு இருக்கு பாரு. உள்ளே இருந்து பார்க்கும் போது தெரியலை.
இவ்வளவு பேரு சுத்தி சத்தம் போடறோம். இந்த இரண்டு சாமிகளுக்கும் தியானம் கலையலை. ரொம்ப சக்தி வாய்ந்தவங்களா இருப்பாங்க போல.
ஆமாடா! இதே நம்ம ஊரா இருந்தா இந்நேரம் அருள்வாக்கு கேட்டு பக்கத்து ஊர் வரை ஜனங்கள் நின்னுருப்பாங்க. இங்க என்னடான்னா யோகமும், தவமும் சல்லிசா போச்சே. எல்லோரும் சும்மா நிற்கறாங்க ..சலித்துக் கொண்டான் வாசு.
போனாப் போறாங்கடா! நாம எங்க இருந்தாலும் நம்ம ஊர் பெருமையை காப்பத்தணும்டா.
வா! இவங்க இப்படி எதுக்கும் அசராம ஆழ் தியானத்துல இருக்காங்கன்னா நிச்சயம் பெரிய சாமிகளா இருக்கணும். கும்பிட்டா நமக்கு நல்லதே நடக்கும் என ஹேமந்த், வாசுவுடன் சாஷ்டாங்கமா விழுந்தான்.
சுற்றி இருந்தவர்களின் பார்வையில் வித்தியாசத்தை உணர்ந்த வாசு சுதாரிப்பதற்குள்..
கீழே அமர்ந்து இருக்கும் சாமியார் நகர்ந்தார். அப்படியும் அந்த கம்பும் அதன் மேல் உள்ள சாமியாரும் விழ வில்லை. கம்பு தனியா நிலத்தில் ஊன்றப் பட்டிருந்தது. அதன் மேல் உட்காரும் பலகை. அதில் தான் மேலே உள்ளவர் அமர்ந்து இருந்தார். கீழே உள்ளவர் நகர்ந்ததும் மேலே உள்ளவரும் மெதுவாக கால் வைத்து இறங்கினார்.
அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க, மேலாளர் முன்னாடி வந்து மைக்கில் பேச ஆரம்பித்தார்...
நமது கம்பெனியின் புதிதாக ஆரம்பிக்கப் பட்டுள்ள இரண்டடுக்கு கட்டுமானப் பிரிவுக்கு உங்கள் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம். நிலையான கட்டுமானம், எந்த நிலையிலும் உறுதி சிதறாத கட்டுமானம் இவையே நமது தாரக மந்திரம்.
அதற்கான விளம்பரமாக இவ்விருவர் நம் கம்பெனி உடைவண்ணம் அணிந்து எதற்கும் அசையாது காலை முதல் மாலை வரை உட்கார்ந்து இருந்தார்கள்.
நிலைப்புக்கும் உறுதிக்கும் எடுத்துக்காட்டாக இருந்த இவர்களுக்கு கம்பெனியின் சார்பாக இந்த நினைவுப் பரிசை வழங்கி கவுரவிக்கிறோம்.
கூட்டம் தட்டிய கைதட்டலில் கொஞ்சம் வாசு, ஹேமந்த் மீதும் விழுந்தது.
ஆசாமியை சாமியாக்கி காலில் விழுந்தீங்களாடா? சிரிப்பலை பொங்கிற்று.
துறவு
துறவு
கூறாமல் துறவறம் கொள்ளும் நிலையில் இருந்தான் அவன், ராஜமாணிக்கம்.
அப்பா! நீ ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லைப்பா! எனக்கு ராகுல் வைச்சிருக்கிற கிரிக்கெட் செட் வேணும்ன்னு சொல்லி 2 நாளாச்சு. இன்னும் வாங்கிண்டு வர! - இது பெரியவன் விஸ்வா
அப்பா! நீ என்ன தான் பண்றே! வெத்து வேட்டுன்னு அம்மா சொல்றது சரியா தான் இருக்கு. எப்பவும் முழிச்சிண்டே உட்கார்ந்திருக்கியே , தண்டம் - இது பெண் வித்யா
காதில் கேட்டவாறே பேப்பரை மேய்ந்து கொண்டிருந்தான் ராஜமாணிக்கம். இந்த குட்டிச் சாத்தான்களுக்கு பதில் சொல்லி என்னவாகப் போகுது. இதுகளை ஆட்டி வைக்கிற பெரிய சாத்தான் இருக்கே , அதான் என் தர்ம பத்தினி நிஷா அவளை சொல்லணும்.
எப்போதும் ஏக வசனம். ஏய், வா, போ தான். கணவன்ங்கற மரியாதை கூட கிடையாது. எல்லாவற்றிற்கும் குற்றம் கண்டு பிடித்து லபோ திபோ என்பாள். புன்சிரிப்போ, இன்சொல்லோ மருந்துக்குக் கூட கிடையாது. மனிதர்களை அனுசரித்துப் போகும் குணம் அறவே இல்லை.
இவனும் பொறுத்துத் தான் கிடக்கிறான். தாய் சொல்லி விட்டு போயிருந்தாள்
கண்ணப்பா! வாய்ச்சவள் சரியில்லை தான். அதற்காக நீயும் பதிலுக்கு பதில் பேசினால் சண்டை முத்தி தெருவுக்கு வரும். அதுக்கு அமைதியாய் அவளை உன் மனசுக்குள் திட்டு , விட்டுக் கொடுத்துப் போ என்று .
பத்ரகாளியாய் வந்து நின்றாள் நிஷா!
வாஷிங்மிஷின்ல துணி கிடக்கு! போய் உலர்த்திட்டு வாங்கன்னேன். இன்னும் போகலை நீ. காலேல எழுந்திரிச்சமா, கூட மாட வேலை பார்த்தோமான்னு இல்லாம பேப்பர்ல என்ன புல் மேய்ச்சுகிட்டு இருக்க.
வரேன்ம்மா! வாயை மூடிக் கொண்டு வாளியை எடுத்துக் கொண்டு போனான்.
இப்படி இருக்கும் ராஜமாணிக்கம் ஆபிஸில் டெர்ரர் மாணிக்கம். அவனை கண்டாலே எல்லோரும் நடுங்குவர். எல்லா பேப்பரும் சரியான நேரத்துக்கு முடிக்கப் பட்டிருக்க வேண்டும். சரியா டேலி ஆகலேன்னா போச்சு அந்த அக்கவுண்ட் பண்ணினவன் கண்ணில் விரலை விட்டு ஆட்டிடுவார். வேலையில் கறார். ராஜமாணிக்கம் பிரிவா ? அப்போ தப்பே கண்டு பிடிக்க முடியாது என சொல்லும் அளவுக்கு இருந்தது அவர் பிரிவு.
அதனாலயே அவருக்கு ரொம்ப நட்பும் இல்லை. அவ்வப்போது கிடைக்கும் சொற்ப இடைவேளைகளில் மோட்டுவளையை பார்த்துக் கொண்டோ இல்லை கண்களை மூடிக் கொண்டோ இருக்கையில் சாய்ந்து கிடப்பார்.
துணி உலர்த்திட்டு வந்தா அடுத்து பிள்ளைங்களை பார்க்க வேண்டியது தானே. உனக்கு தானே பெத்தேன். வந்து கிளப்பு ஸ்கூலுக்கு என்றாள் நிஷா.
அவள் அப்படித்தான். அவளுக்கு போதிக்கப் பட்டிருந்த போதனை அப்படி . புருஷனை கைக்குள்ளேயே வைச்சுக்கணும்ன்னா இரவில் நீ வேலைக்காரியாகவும் பகலில் அவன் வேலைக்காரனாகவும் இருக்கணும் என அவள் வீட்டில் போதித்திருந்தனர். அவளுக்கு எப்பொழுதும் அவன் வேலைக்காரனே. நிமிஷம் சும்மா விட மாட்டாள். இதற்காக ஆபீஸிலேயா உட்கார முடியும்.
பிள்ளைகளும் அதை பார்த்து அவர்களின் அப்பாவை மதிக்க கற்றுக் கொள்ள வில்லை என்பது தான் பரிதாபம்.
வீட்டுக்குள் பெருக்குவது, துடைப்பது, துணி உலர்த்துவது எல்லாம் அவனே. நிஷா சமையல் செய்யவே அலுத்துக் கொள்வாள். இத்தனைக்கும் காய் இவன் தான் அரிந்து தருவான்.
ஆனால் அப்படியே வாசல் வரை பெருக்கிட்டா போச்சு. பத்து குடித்தனக்காரர்கள் இருக்கும் வீட்டில் கூப்பாடு போடுவாள். நீ என்ன முறைவாசல் செய்யறியான்னு. கேட்டு கேட்டு இவள் இப்படித் தான். பாவம் ராஜமாணிக்கம் என தொச்சு தொச்சுன்னு போய் விடுவார்கள் அக்கம் பக்கத்தினர். இவனுக்குத் தான் நாக்கை பிடுங்கிக்கலாமான்னு இருக்கும்.
ஓரிருமுறை அப்படியே எங்காவது ஓடி விடலாமான்னு நினைத்து இருக்கிறான். முடிய வில்லை.
குடும்பம் கோவிலாவது பெண்களின் கையில் தான் இருக்கிறது. அனுசரணை இருவருக்கும் வேண்டும். ஆண்பிள்ளை அடிபணிந்து போகிறான். பெண் அகமகிழ்ந்து விரட்டுகிறாள். பின் பிள்ளைகள் எப்படி தந்தையை மதிக்கும்?
குழம்பிய படி கிடந்தான் ராஜமாணிக்கம். மனசு அங்கும் இங்கும் குதியாட்டம் போட்டது. நிஷா நல்லவளாய் இருந்திருந்தால் குழந்தைகளும் நன்றாய் பேசுவார்கள். இவர்கள் இப்படித் தான். மாற்ற முடியாது. ஏன் என் மனசுக்குள் நான் இவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேனோ அவ்வாறு நினைத்து வாழ்ந்து கொண்டால் போயிற்று. அவன் மன நிஷா ஆதரவாக காலை பிடித்தவாறு..
என்னங்க! ஆபிஸில் ரொம்ப வேலையா? டயர்டா தெரியறீங்களே! இந்த காபியை குடிச்சுட்டு படுத்துக்கோங்க.
ஒயிலாய் நடந்து காபி கொடுத்து மின்விசிறியை தட்டிவிட்ட மனைவி புதிதாகத் தெரிந்தாள்.
பார்வை திரும்பியதில் பாசமாய் குழந்தைகளும்..
ஹே! அப்பா வந்தாச்சு! கிரிக்கெட் பேட் இன்னிக்கு வாங்கிட்டு வரலையா? பரவாயில்ல இந்த மாசத்துக்குள்ள வாங்கித் தாங்க என்ற விஸ்வாவும் புதிதாகத் தெரிந்தான்.
அப்பா! அப்பா! நல்ல அப்பா !சமத்து அப்பா! ஆசை அப்பா என்று கொஞ்சும் வித்யாவும் புதிதாகத் தெரிந்தாள்.
இப்படியே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? சலனப்பட்ட மனம் பிறழ ஆரம்பித்தது.
என்ன ஆச்சு இவருக்கு வந்ததிலே இருந்து நானும் கத்திக்கிட்டே இருக்கேன். மனுஷன் பேயடிச்ச மாதிரி உட்கார்ந்திருக்கார். வீட்டு வேலைகள் எல்லாம் அப்படியே கிடக்கு. புள்ளைகளையாவது பார்த்துக்கலாம்..பாடம் சொல்லிக் கொடுக்கலாம். இப்படி மண்ணு மாதிரி உட்கார்ந்திருக்கியே, ஏய்! எழுந்திருன்னு சொன்ன நிஷா அவர் கண்ணுக்கு மின்விசிறி போட்டு காபி கையில் கொடுப்பவளாக இருந்தாள்.
ராஜமாணிக்கம் மனதுக்குள் வேறு நிஷா, வேறு விஸ்வா, வேறு வித்யா.
ஆம்! துறவறம் பெற்றான் மனதில்.
விருட்ச விதைகள்
விருட்ச விதைகள்
முதுமை என்பது வரம் வாழத் தெரிந்தவர்களுக்கு. இளமையில் விதை என்பார்களே. அது முதுமைக்கான விதை தான்.
அத்தகைய வரம் வாங்கி கொண்டு வந்தவர்கள் தான் காமுவும் வேம்புவும்.
கண்ணுக்கு கண்ணாக இரண்டு குழந்தைகள். பொண் ஒண்ணு பிள்ளை ஒண்ணு. இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி பேரக் குழந்தைகளும் பார்த்தாச்சு.
விஸ்தாரமா வீடு. ஆள் படைக்கு குறைவில்லை. ராணி மாதிரி காமுவை வாழ வைச்சார் வேம்பு. என்ன இன்னிக்கு பார்த்தா அவருக்கு வயசு எண்பதுன்னு சொல்ல முடியுமா என்ன. அப்படி ஒரு மெலிதான தேகம். தேஜஸ்ல அவரது அம்மாவை கொண்டு இருந்தார்.
காமு மட்டும் என்ன குறைந்தவளா என்ன? ஆயிரம் பேருக்கு அன்னபூரணியாய் சமைத்த கை. அந்த காலத்தில் காஸ் அடுப்பா , மின் அடுப்பா .. ஒன்றும் இல்லை. விறகடுப்பின் புகையை ஊதி ஊதி இவள் கண் இரண்டும் மங்க தொடங்கி இப்போ சுத்தமா பார்வையே இல்லை.
ஆனாலும் லஷ்மீகரம் முகத்தில் தாண்டவமாடும். ஒன்பது கஜம் சின்னாளம்பட்டும் தேவேந்திராவும் மாற்றி மாற்றி அமர்க்களப்படும். பெரிய மூக்குத்தியும், டாலடிக்கும் வைரத் தோடும், கைக்கு இரண்டாக நெளி வளையல்களும், சற்று பெரிதான வாடாமல்லி கலரில் குங்குமமும் காமுவை மிக அழகியாக காட்டும்.
அந்த அறையே சாம்பிராணி புகையின் நறுமணத்தால் சூழப் பட்டு இருந்தது. ஒரு பக்கம் கட்டில் போடப் பட்டு கட்டிலோடு கட்டிலாய் படுத்து இருந்தார் வேம்பு. சுற்றிலும் எத்தனை பேர் இருந்தாலும் பார்வை என்னவோ காமு மேல் தான் இருந்தது. என் மனைவி எவ்வளவு லஷ்மீகரமா இருக்கான்னு நினைத்தார் வேம்பு.
ஆச்சு இன்னியோட ஆறு மாசமாச்சு. ஒரு பக்கம் கையும் காலும் விழுந்து. வாயும் கோணிண்டு பேச்சும் குழறலா தான் இருக்கு. இவர் என்னவோ பேசறார் தான். மத்தவாளால தான் புரிஞ்சுக்க முடியலை.
“காமு, இன்னிக்கு அமாவாசைடி. கனத்த நாள் . பத்திரமா பார்த்துக்கோடி உன் ஆம்படையானை!”
வந்திருந்த அத்தை அவளிடம் சொன்னாள். அத்தை படு கிழம். அத்தனை உறவுகளை பார்த்தவள்.
காமுவின் நடுங்கும் கைகளை அந்த முதிய கரம் பற்றிக் கொண்டது.
'ம்' என்றாள் காமு. எல்லா வைத்தியமும் பார்த்தாச்சு. ஆத்துக்கு கூட்டிண்டு போங்கோன்னுட்டாரே அத்தை. இனி தெய்வம் தான் என்றபடி வேம்புவை நோக்கிச் சென்றாள்.
பொண்ணும் பிள்ளையும் கலங்கி நின்றார்கள். பேரன் பேத்திகளும் அப்படியே. வேம்பு அத்தனை பேருக்கும் உசிராச்சே. காமு எதற்கும் கலங்க வில்லை. பிள்ளையின் கை பிடித்து கட்டில் அருகே அமர்ந்து கொண்டாள்.வேம்புவின் கை அவள் கைக்குள் இருந்தது. புறங்களை தள்ளி விட்டு அகமோடு பேசினர் மனதால்.
"பதினாறாம் வாய்ப்பாடு சொல்லுடா வேம்பு.!"
ஆசிரியர் குச்சியை எடுத்துக் கொண்டு மிரட்டினார். அன்றைய பாடத்தை படிக்காத வேம்பு தலையை குனிந்து நிற்க ..
"இந்தாடி காமு, நீ அவனது அத்தை பெண் தானே. உன் கையால் அவனை ரெண்டு கொட்டு கொட்டு. அதான் தண்டனை "
என்று சொல்ல அவளும் கொட்டவும் வகுப்பே கொல்லெனச் சிரித்தது.
"நீ வாடி ஆத்துக்கு. ஆத்திரம் தீர கொட்டுவேன் "
என சூளுரைத்த அவன் இன்று வரை கோபமாக கூட பேசியதில்லை.
இரவும் வந்தது. அனைவரும் வேம்புவை சுற்றியே படுத்து கொண்டிருந்தனர். அமாவாசை வேறா எங்கும் இருட்டு. ஒரு வெளிச்சம் இருட்டில் அஸ்தமிக்கப் போகும் நேரத்தை நினைத்து மனம் நொந்தனர்.
வேம்பும் சாதாரண பட்டவரில்லை. கை தேர்ந்த ஜோஸ்யர். கணக்கிலேயே தன் காலத்தை கணித்து நாள், நேரம் , நிமிடம் முதற்கொண்டு எழுதி வைத்து இருந்தார். அதை தெரிந்து கொண்ட காமுவுக்கு மனம் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை.
பார்வை அப்படியே அந்த வெள்ளி கூஜா பக்கம் சென்றது. ஒருமுறை சிவகங்கை அரண்மணை சென்ற போது அந்த வேலைப்பாடுள்ள பன்னீர் சொம்பு மாடலில் அமைந்த கூஜாவை பார்த்து பெண் ஆசைப்பட்டாள் என்பதற்காக வெள்ளிக்கடை வாலா செட்டியை ஆத்திற்கே கூப்பிட்டு அதே மாடலில் பண்ணச் சொன்னார். அது இன்னும் அவளின் பெண் வரை வேம்பின் பேர் சொல்லி நிற்கிறது. அதில் பால் நிரப்பி தலைமாட்டில் வைத்திருந்தார்கள்.
சொந்தங்களும் பந்தங்களும் சிறிது பாலை வேம்புக்கு கொடுத்த வண்ணம் இருந்தார்கள்.
போகும் தசையில் ராம நாமம் சொல்வது பயணிக்கும் ஜீவனுக்கு நல்லதென காமுவின் சின்னம்மா சொல்ல பேரனும் பேத்திகளும் ராமா ராமா என்று சொல்லி கொண்டே இருந்தனர்.
சட்டென முழித்த வேம்பு “ நாமா வேணாம் முகா சொலு” என்றார்.
ராமன் வேண்டாமாம் . முருகா என் சொல்லணுமாம். அந்தளவு முருகன் மேல் ஈடுபாடு. வைணவர் தான் ஆனாலும் முருகனுக்கென கோவில் கட்டி அதனை பரம்பரையாக பராமரித்து வரும் குடும்பம் அவர் குடும்பம்.
ரேழியில் ஆளரவம் கேட்டது. இரவு மணி பதினொன்று. எப்பவுமே அந்த வீட்டில் கதவடைப்பதே இல்லை. வெறுமே சாத்தியிருப்பார்கள். யார் என பார்க்க பிள்ளை எழுந்து போனான். காமுவும் சிந்தை கலைந்து என்னவென்று விசாரித்தாள்.
"அம்மா! பெரியம்மா! பெரிய சாமி எப்படிம்மா இருக்காரு? "
என்றபடி வந்த ஆண்கள் அனைவரும் மாலை போட்டிருந்தனர். அவர்கள் ஊரிலிருந்து திருச்செந்தூருக்கு ஒவ்வொரு ஷஷ்டிக்கும் பாத யாத்திரையாக செல்பவர்கள். அன்று அமாவாசை கிளம்பினால் ஷஷ்டி அன்று முருக தரிசனம். முருகனுக்குகந்த நாள்.
"நம்ம சாமி கிட்ட துண்ணூறு வாங்காம நாங்க பயணிக்க மாட்டோமே பெரியம்மா. அதான் வந்தோம் " என்றனர்.
காமுவும் வந்த அழுகையை அழுந்த துடைத்துக் கொண்டு பிள்ளையிடம் கை காண்பித்தாள். அவன் உடனே எழுந்து வந்து தகப்பனாரிடம் காதில் சொல்ல வேம்பு முகத்தில் கோடி சூர்ய ப்ரகாசம். என் அப்பன் என் முருகன் எனை கூப்பிட ஓடோடி வந்து விட்டான் என்று மனதோடு ஆர்ப்பரித்தாரோ. அவ்வளவு தேஜஸ் முகத்திலே. பார்த்த அனைவருமே காமுவிடம் சொன்னனர் அவர் விடை பெறும் நேரம் வந்து விட்டதென.
எழும்பாத வலது கையை தூக்கி பிள்ளையே அனைவர் நெற்றியிலும் திரு நீறை இட்டு விட்டான். அனைவரும் வேம்பின் கால் தொட்டு வணங்கி சென்றனர்.
சூழ்ந்த மௌனத்தை உள்ளே வந்து கொண்டிருந்த அடுத்த ஆத்து அம்பி கலைத்தான்.
"யாத்திரை கோஷ்டிக் காரா இவ்வளவு நேரம் பயணத்தை ஆரம்பிச்சிருப்பாளே. இன்னும் அரை மணி நேரத்தில் ஊர் எல்லையை தாண்டிடுவா. பத்திரமா எல்லோரும் போய்ட்டு வந்துடணும் முருகா " என்றபடி வந்து கொண்டிருந்தான்.
"ஆமாமா அம்பி . பயணம் ஆரம்பிச்சுடுத்து."
வேம்புவை தொட்டு தடவிக் கொண்டிருந்த காமு சொன்னாள்.
"எல்லோரும் வாங்கோ குழந்தைகளா ! உங்க தாத்தா பயணப் படறார். கை கூப்புங்கோ.! "
பிள்ளையை கூப்பிட்டு வேம்புவை அவன் மடி மேல் வைச்சிக்கச் சொன்னாள். பெண்ணை வேம்புக்கு வாயில் பால் வார்க்கச் சொன்னாள். தான் மட்டும் அவர் பார்வையில் இருந்து நகரவே இல்லை. வேம்புவும் அவளையே அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். கை அவளது கைக்குள் இருந்தது.
குழந்தைகள் "முருகா ! முருகா !"என சொல்ல காமுவின் கை ஒவ்வொரு பகுதியாய் தடவியது. வயிறு சூடு இல்லடா . குளிர்ந்து போச்சு. இன்னும் மேலேறி விலா பக்கமும் அடங்கி போச்சு.
"ஏண்ணா! என்னை விட்டு போறேளா? "
காமுவின் மனம் அரற்றியது.
"கொடுத்து வைத்தவர்னா நீங்கள். இத்தனை பேரும் அருகிலிருந்து உங்களை வழியனுப்பறா. "
விடாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது அவளுக்கு.
வேம்பின் பார்வை அவளை விட்டு அகல வில்லை. அகக் கண்ணால் அவரும் மனக் கண்ணால் அவளும் வாழ்க்கையை பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.
ஆச்சுடா உடல் சூடு போய்டுத்து. கண் வழியா தான் உயிர் போக போறது. தலையில் கை வைத்து தடவிய படியே காமு குழந்தைகளை நமஸ்காரம் பண்ணச் சொல்லி உத்தரவிட்டாள்.
வேம்பின் கை அவள் வளையலை பிடித்தபடி இருக்க கண் அவளை பார்த்த படி இருக்க உயிர் பயணம் ஆரம்பித்தது. திருசெந்தூருக்கென பயணப் பட்டவர்கள் ஊர் எல்லை தாண்டும் வரை பொறுத்து இருந்து அவரின் பயணம் ஆரம்பித்தது.
காமுவுக்கு கண் இல்லாத குறையை போக்கி கண்ணாய் இருந்தவர் காலன் எடுத்துக் கொண்ட பத்தாம் நாள்.
அடுத்தாத்து செல்லம்மா மாதிரி என்னையும் முக்காடு போட்டு உட்கார வைச்சுடுவாளோ என கலங்கிய காமுவின் கை பிடித்த பேத்தி அனைவரிடமும் உரக்கச் சொன்னாள்.
"எங்க பாட்டி எப்பவும் இப்படியே தான் இருப்பா. எங்க தாத்தாவோட மகாலஷ்மி அவோ. அவர் இப்படி நகைகளோடு பார்க்கத் தான் ஆசைப்படுவார்."
புரிந்து கொண்டாயே என்னை என கலங்கிய காமுவின் கை பேத்தியை தழுவிக் கொண்ட படி வேம்புவை நமஸ்கரித்தது.
வெகு நேரம் காலை நீட்டிக் கொண்டு பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்ததால் மரத்துப் போன காலை நீவி விட்ட படி எழுந்த காமுவின் காதில் கொள்ளுப் பேரனின் வீறீட்ட அழுகை புன்னகையை பூசியது. ஆசை தீர அவனை எடுத்து அணைத்துக் கொண்டு சொன்னாள்..
"எங்க போறாராம் அவர் என்னை விட்டுட்டு? இதோ வந்துட்டாரே எங்காத்து வேம்பண்ணா. "
பேத்தி வயத்துக் கொள்ளுப் பேரன் வேம்பு பிறந்த அதே அமாவாசை சுவாதியுடன் கூடிய தீபாவளி பிறந்திருந்தான் . ஆம். இருட்டில் கிடந்த வெளிச்சம் பிரகாசித்தது.
.. முற்றும். ...
Subscribe to:
Comments (Atom)



